ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகொப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது.
இவர் நான்கு கார்களை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு பறந்து சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடைசி நாள் வரை தாலிபான்களை நாங்கள் எதிர்ப்போம், நான் பதவி விலக மாட்டேன் என்று அஷ்ரப் கானி அறிவித்து வந்தார்.
கடைசியில் காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்தன. அடுத்த சில நிமிடங்களில் ஆட்சி மாற்றம் குறித்து காபூல் ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்களுக்கும் அஷ்ரப் கானிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இனி கண்டிப்பாக தாலிபானை வீழ்த்த முடியாது என்பதை அஷ்ரப் கானி உணர்ந்து கொண்டார். தாலிபான்களும் இவரை கைது செய்தாலோ ஆயுதங்களை காட்டி மிரட்டி பணிய வைத்தாலோ சர்வதேச அளவில் பிரச்சனை வரும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டது.
“பாதுகாப்பாக நீங்கள் வெளியேறும் வாய்ப்பை கொடுக்கிறோம். அமைதியாக எங்களை எதிர்க்காமல் பதவி விலகுங்கள்” என்று தாலிபான்கள் அஷ்ரப் கானியிடம் கூறியது. இதை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் கானி ராஜினாமா செய்தார். அவருக்கும் வேறு வழி இல்லை. அதோடு இரவோடு இரவாக காபூலில் இருந்து தாலிபான் அனுமதியோடுதான் இவர் தப்பி சென்றார்.
இந்த நிலையில்தான் அஷ்ரப் கானி நான்கு கார் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பி சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காபூலில் இருக்கும் ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தன்னிடம் இருந்த பல கோடி மதிப்புள்ள பணம், நகை, வைரங்களை இவர் ஹெலிகாப்டரில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். இன்னும் பல கோடிகள் இவரின் அறையில் இருந்துள்ளது.
ஆனால் இதை ஹெலிகாப்டரில் வைக்க இடம் இல்லை. முடிந்த அளவு தனது சொத்துக்களை உள்ளே வைக்க முயன்றுள்ளார்.
இதனால் அதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு முடிந்த அளவு சொத்துகளை எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இவர் தஜிகிஸ்தான் சென்றதாக செய்திகள் வெளியானாலும் அவரின் உண்மையான இருப்பிடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
அஷ்ரப் கானியின் உண்மையான இருப்பிடம் இப்போது சந்தேகத்திற்கு உரிய ஒன்றாகவே உள்ளது. இவர் அமெரிக்காவிற்கு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய விதம் வியப்பூட்ட கூடியதாக இருந்ததாகவும், அவர் மூட்டை மூட்டையாக பணங்களை அடுக்கியதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.