மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.
293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.