தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
ஊரடங்கு (Tamil Nadu Lockdown) கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்பதற்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், பாதிப்பு தீவிரமாகும்போது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்வார்.
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. சமீப நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதால் மீண்டும் 2000ஐ நெருங்கியது. இப்படியே சென்றால் செப்டம்பர் மத்தியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட தீவிர ஊரடங்குக்குப் பின்னர்தான் பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையத் தொடங்கியது. எனவே மருத்துவ வல்லுநர்கள் சொல்வது போல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மீண்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்தும். ஆனால் அந்த அளவு நிலைமை மோசமடைய அரசு அனுமதிக்காது என்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் திங்கட்கிழமையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலானா ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் கோயில்களில் தரிசனத்திற்காக தடையை நீக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. தியேட்டர்களை திறக்க ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்த நிலையில், இதற்கான முடிவு 20ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், பொதுசுகாதாரத்துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.