ஸ்பெயினின் கேனரி தீவுகளின் அட்லாண்டிக் கடற்பகுதியில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவை வியாழக்கிழமை மூழ்கும் படகில் இருந்து 30 வயது பெண் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் கூறியது, அந்தப் பெண் வழங்கிய தகவலின்படி, இந்த படகு ஒரு வாரத்திற்கு முன்பு 53 அகதிகளுடன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது.
கேனரி தீவுகளுக்கு தெற்கே 255 கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமை அட்லாண்டிக் பெருங்கடலில் குறித்த படகு மூழ்குவதை ஒரு வணிகக் கப்பல் கண்டது.
இதனையடுத்து, ஸ்பெயின் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பாளர்கள், ஒருவர் மட்டுமே உயிருடன் இருப்பதைக் கண்டு அவரை மீட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான படகின் பாகங்களை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், இருந்த பெண்னொருவரை மட்டும் மீட்டு, அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்து பல மணி நேரங்கள் ஆனதால், கடலில் மூழ்கிய 52 அகதிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகு மேற்கு சஹாரா கடற்கரையிலிருந்து புறப்பட்டதாகவும், பயணிகள் ஐவரி கோஸ்டில் இருந்து வந்ததாகவும் உயிர்தப்பிய பெண் கூறியுள்ளார்.
கேமினாண்டோ சின் ஃபிரான்டெராஸ் செஞ்சிலுவை சங்கத்தின் தகவலின்படி, 35 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதுவரை உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.