சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் அதன் பலன் ஏன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை? அப்படி என்றால் லாபம் சம்பாதிப்பது யார்? இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக அரசு, மதிப்புக் கூட்டு வரியை 3 ரூபாய் குறைத்ததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 99.47 ரூபாய்க்கும்; டீசல் விலை, 93.84 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விதிக்கும் அடிப்படை விலையின் மீது தான், மத்திய – மாநில அரசுகள் தங்களது கலால் வரியையும், மதிப்புக் கூட்டு வரியையும் விதிக்கின்றன.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று, 77 டாலர் வரை விற்பனை ஆனது. அதன் பின், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக்’ அதுநாள் வரை நிறுத்தி வைத்திருந்த புதிய உற்பத்தியை மீண்டும் துவக்கியது.ஆகஸ்ட் முதல், டிசம்பர் வரையான காலகட்டத்தில், நாளொன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்கள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதாக ஒபெக் ஒப்புக்கொண்டது.
இந்த அறிவிப்பாலும், சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, 66.45 டாலர் வரையும், துபாய் மற்றும் ஓமன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, 68.95 டாலர் வரையும் சரிந்துள்ளன. இவ்விரண்டு இடங்களில் இருந்து தான் நாம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதற்கு, ‘இந்தியன் பாஸ்கெட்’ அதாவது ‘இந்திய பொதி’ என்று பெயர். இதன் விலை, பீப்பாய் ஒன்றுக்கு 68.91 டாலர் ஆக சரிந்துள்ளது; கிட்டத்தட்ட 9 டாலர் விலை மலிவு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது உடனே மக்கள் தலை மீது ஏற்றப்படுகிறது. அதேபோல் விலை சரியும்போதும், அதன் பயனை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தானே நியாயம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
இந்தப் பயன் கொடுக்கப்பட்டிருந்தால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைந்திருக்கும்.அதற்கு மாறாக, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தங்களது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே முனைகின்றன. கச்சா எண்ணெய் விலை சரிவால், டீசல் 1 லிட்டருக்கு 5.70 ரூபாய் வரையும்; பெட்ரோல் 1 லிட்டருக்கு 3.5 ரூபாய் வரையும் இந்நிறுவனங்களின் லாபம் உயரும் என்று கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி முதல், மே மாதம் வரை, ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது, பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படவில்லை. அதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அடைந்த நஷ்டத்தை ஈடுசெய்யவே, தற்போது கிடைத்து வரும் லாபத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 1 லிட்டர் பெட்ரோலை 41.6 ரூபாய் வீதமும்; 1 லிட்டர் டீசலை 42.33 ரூபாய் வீதமும், பெட்ரோலிய டீலர்களுக்கு வழங்கி வருகின்றன. அதன் மீது தான், மத்திய – மாநில அரசுகளின் வரிகள் விதிக்கப்படுகின்றன.சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுமானால், இறுதி விற்பனை விலை கணிசமாகவே குறையும்.