புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா நல்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்தியக் கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தியும் கூட, கிழக்கு இந்தியத் துறைமுகங்களிலிருந்து திரவ ஒட்சிசன் கொண்ட அவசர சரக்குகளை வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.
மத சுற்றுலாவை மேம்படுத்துவதையும் இந்தக் கலந்துரையாடல் மையமாகக் கொண்டிருந்தது. இலங்கையில் பௌத்த கலாசாரத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
கடைசியாக 2016 இல் கூட்டப்பட்ட இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவை முன்கூட்டியே கூட்டும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, மீன்வளம் மற்றும் மின் துறை ஆகியவற்றின் கீழ் குறிப்பிட்ட பாடப் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டு ஆணைக்குழுவின் கீழ் உள்ள ஆறு பணிக்குழுக்கள் கூடிய விரைவில் சாத்தியமான வாய்ப்பை சந்திக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது.
மீன்வளம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இரு தரப்பினரும் பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள, நடைமுறைத் தீர்வைத் தேடுவதற்கும் ஒப்புக்கொண்டனர். இலங்கையில் மீன்வளத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் உதவி பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் இந்தியா தனது மருந்து உற்பத்தி ஆலைகளை இலங்கையில் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நெருங்கிய அண்டை நாடுகளாக காலத்தின் சோதனைகளைத் தாண்டி தற்போதைய ஒத்துழைப்பு மட்டத்தில் திருப்தியை வெளிப்படுத்தியதுடன், பல துறைகளில் இருதரப்பு உறவுகளை இன்னும் உயர் மட்டத்திற்கு உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.