தற்போதுள்ள கொரோனா திரிபுகளை இணைத்து கொரோனா வைரஸின் புதிய “சூப்பர் வேரியன்ட்” தோன்றக்கூடும் என்று பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார்.
ஒரு புதிய திரிபு வெளிப்படும் வாய்ப்பு அதிகம் என்றும், நாம் இனி தடுப்பூசிகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் நோயெதிர்ப்பு நிபுணரான சாய் ரெட்டி, SonntagsBlick பத்திரிகையிடம் கூறினார்.
இந்த புதிய திரிபு வைரஸ், நிச்சயமாக சுவிட்சர்லாந்தை எட்டும் என்று பாசலில் உள்ள மத்திய தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச்சின் உயிரமைப்பு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இணை பேராசிரியராக பணிபுரியும் 40 வயதான ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
அதனால்தான் அடுத்த சில ஆண்டுகளில் நாங்கள் பல தடுப்பூசிகளுக்குத் தயாராக வேண்டும், இது தொடர்ந்து புதிய திரிபுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென்னாப்பிரிக்காவின் பீட்டா (Beta) திரிபு, பிரேசிலின் காமா (Gamma) திரிபு ஆகிய கொரோனா வைரஸ் திரிபுகளை அவர் சுட்டிக்காட்டினார், அவை நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக ஓரளவு செயற்படுகிறது. மறுபுறம், டெல்டா திரிபு தொற்றும் தன்மை கூடியது, ஆனால் இதுபோன்ற திரிபுகளை அது இன்னமும் உருவாக்கவில்லை.
பீட்டா அல்லது காமா அதிகம் தொற்றும் திரிபாக மாறினால், அல்லது டெல்டா பிறழ்வுகளை உருவாக்கினால், நாம் தொற்றுநோயின் புதிய கட்டத்தைப் பற்றி பேசவேண்டியிருக்கும் என்று ரெட்டி கூறினார். இது வரும் 2022 ஆண்டின் பெரிய பிரச்சனையாக மாறும். கோவிட்-22 ஆகக்கூட இருக்கலாம், இது இப்போது நாங்கள் அனுபவிப்பதை விட மோசமானது என்றும் அவர் எச்சரித்தார்.