தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நினைவிடம் அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் “நவீன தமிழகத்தை” உருவாக்கும் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் மெரினாவில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24, 2021) அறிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் (state Assembly) தெரிவித்தார்.
சமூக நலன், போக்குவரத்து, இலக்கியம், கல்வி, நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த ஸ்டாலின் தனது தந்தையை “நவீன தமிழகத்தின் சிற்பி” என்று பாராட்டினார்.
“சுமார் அரை நூற்றாண்டு வரை தலைப்புச் செய்திகளில் நிரந்தரமாக இருந்த கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் நாளன்று நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார்” என்று கருணாநிதி குறித்து ஸ்டாலின் கூறினார்.
அவர் இறப்பதற்கு முன்பு அவர் தமிழ் சமூகத்திற்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். தாய் தமிழகத்திற்காக அவர் செய்த மகத்தான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவருடைய சாதனைகளை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் விதத்திலும் அண்ணா நினைவிடம் (திமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் அண்ணாதுரை) வளாகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும்.