Home இலங்கை அரசாங்கம் மக்கள் மீது மரண தாக்குதல் நடத்தியுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கம் மக்கள் மீது மரண தாக்குதல் நடத்தியுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு

by Jey

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பொதியை தட்டிப் பறித்த அரசாங்கம் அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்றுமொரு மரண தாக்குதல் நடத்தியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரணத்திற்கு பதிலாக 1998 ரூபா ஏமாற்று நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனை இலவசமாக விநியோகிப்பதாக பொய் தகவல் வௌியிடுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

தொற்று நோய் காலத்தில் நாட்டு மக்களுக்கு சௌகரியத்தை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் அசௌகரியத்தை மக்கள் மீது சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

7 அறிவு கொண்ட புதிய நிதி அமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் 160 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீன இவ்வாரம் 50 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் விலை கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் இயலாமை இதன்மூலம் வௌிப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறும் சுகாதார அமைச்சர்கள் பின் கதவு வழியாக தூதரகங்கள் மூலம் மருந்துகளை கோருவதாகவும் நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா பாதிப்பு வீதம் 15.8% ஆக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளமை மிகவும் அபாயகரானதெனவும் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகள் இலங்கை அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ இன்று 26ம் திகதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

related posts