இலங்கையில் தளர்வுகளுடனான பொது முடக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கொவிட் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், எதிர்வரும் 06ஆம் திகதி வரை பொது முடக்கத்தை நீடிப்பது என்ற கடினமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது முடக்கம் நீடிப்பதால் இலங்கையில் 27,000 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
பொதுமுடக்கத்தை (Lockdownஐ) எதிர்வரும் ஓகஸ்ட் 30ம் திகதி திங்கட்கிழமை முதல் நீக்கி அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகளை முன்னெடுக்கத் தீர்மானித்தால் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16,700 ஆக அதிகரிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்தது.
அத்துடன், ஓகஸ்ட் 30ஆம் திகதி முடக்கம் நீக்கப்பட்டால் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் 1.3பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதாவது 21,000 கோடி ரூபாவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தை செப்டம்பர் 18ம் திகதிவரை நீடித்தால் உயிரிழப்புக்கள் 13,712 ஆகவும் பொருளாதார தாக்கம் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் (சுமார் 27,000 கோடி ரூபாவாகவும்) அமையும்.
இதுவே ஒக்டோபர் 2ம் திகதிவரை பொதுமுடக்கத்தை நீடித்தால் உயிரிழப்புக்கள் 10,400 ஆகவும் பொருளாதார தாக்கம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும் என இந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“Epidemiological and Economic Projections of Mitigation Measures for the Covid-19 Pandemic in Sri Lanka’s Roadmap” அறிக்கையில் முன்வைக்கப்பட்ட இந்த மதிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று( 26.08.2021) நடத்தப்பட்ட மெய்நிகர் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முதற்தடவையாக நாட்டில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நேற்றுத்தாண்டியது. 209 கொவிட் மரணங்கள் நிகழ்ந்ததாக சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.
கடந்த 10 நாட்களில் மாத்திரம் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை இலங்கையில் 8000இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.