ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 72 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் மற்றும் தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைபற்றியதிலிருந்து அங்கு அசாதாரணமான சூழலே நிலவுகிறது. ஆப்கனைவிட்டு வெளியேற மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகிறார்கள். இந்தநிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில் தற்போது வரை 72 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர்.
எனினும், மக்களை வெளியேற்றும் தங்களது பணி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோரத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகளிலும்கூட தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே காபூல் விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அமெரிக்கா எச்சரித்ததுபோலவே தற்போது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வியாழக்கிழமை காபூலில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளார்.