Home உலகம் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம்

தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம்

by Jey

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்ப மறக்க மாட்டோம் எனவும், அதற்கு காரணமானவர்களை தேடிவந்து வேட்டையாடுவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சொந்த நாட்டு மக்களே வேறு நாட்டிற்கு தப்பியோட முயற்சித்து வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஆக.,26) காபூல் விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில், ஆப்கானியர்கள் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில், அமெரிக்க மாலுமிகள் 12 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை, ஐஎஸ் அமைப்பும் உறுதி செய்தது. காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்

related posts