காபூல் விமான நிலையத்திலிருந்து, இறுதித் தருணம்வரை பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 170 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்தும் விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்பினர் வெளியேறுவதற்கான காலம் எதிர்வரும் 31 திகதியுடன் நிறைவடைகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் காத்திருப்பதாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, தலிபான்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.