காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலைத் திட்டமிட்ட ISKP தீவிரவாதிகளின் நிலைமீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று சனிக்கிழமை அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு திட்டம் வகுத்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
காபூலின் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் குறைந்தது 175 ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஐஎஸ்ஐஎல்-உடன் இணைந்த ISKP குழுவின் “திட்டமிடுபவர்” மீது கிழக்கு ஆப்கானிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்தது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளையின் கேப்டன் பில் அர்பன்கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இலக்கை முடித்துவிட்டோம். நிச்சயமாக இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என கூறினார்.
வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் இருந்து தொடர்ச்சியான கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க இராணுவத்தின் இந்த பதிலடி வருகிறது.
13 அமெரிக்கப் படையினர் உயிரிழப்புக்குக் காரணமான பயங்கரவாதிகளை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததற்கு ஒருநாளுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஐஎஸ்.ஐஎஸ்-கே (கொராஷன்) தீவிரவாதிகளைத் தாக்க தகுந்த திட்டம் வகுக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் பென்டகனுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருந்ததாக அமெரிக்க மத்திய கட்டடை படையின் தலைவர் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி கூறியிருந்தார்.
அமெரிக்க துருப்புக்களை மீள பெறுவதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்கப் படைகளை குறிவைத்து மேலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘வெளியேற்றத்தின் அடுத்த சில நாட்கள் எங்களுக்கு மிக ஆபத்தான காலம்’ என்று வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி கூறினார். ஆகையால் விமான நிலைய நான்கு வாயில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா வீரர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.