சீனாவில் வரி ஏய்ப்பு செய்த பிரபல நடிகைக்கு, 338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக வலம் வரும் ஜெங் ஷூவாங், 30. இவர் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ‘டிவி’ தொடரில் நடித்து வந்தார். அந்த தொடருக் காக ஒப்பந்தம் செய்திருந்த ஷூவாங், அதை வைத்து இரண்டு ஆவணங்களையும் தயார் செய்துள்ளார்.அதில் ஒரு ஆவணத்தில், தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல் குறிப்பிட்டிருந்தார்.
அதில் உண்மையான ஆவணத்தை தன்னிடம் வைத்து, குறைந்த வருமானம் கிடைப்பது போல் குறிப்பிட்டிருந்த ஆவணத்தை மட்டும் வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்திருந்தார்.அதன் வாயிலாக குறைந்த வரியை அவர் செலுத்தி வந்தது சமீபத்தில் அம்பலமானது.இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்த நடிகை ஷூவாங்கிற்கு, 338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் நேற்று பிறப்பித்தது.