சுவிட்சர்லாந்தின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் மூன்று நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன.
வடக்கில் Schaffhausen இல் சுமார் 250 பேரும், Valais கன்டோனில் சுமார் 200 பேரும், இத்தாலிய மொழி பேசும் Bellinzona விலும் சனிக்கிழமை மமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளை இவர்கள் கண்டித்தனர். போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக முன்னெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிச்சயமற்ற வைரஸ் சூழ்நிலையால் – தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2,500-3,000 ஆக உயர்ந்துள்ளது என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக அணிவது போன்ற தொற்றுநோய் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து விரைவில் ஆராயப்படும் என்றும், செப்டம்பரில் நிலைமைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் மருத்துவமனைகளின் அதிக வேலைப்பழுவைத் தவிர்ப்பதற்காக, பெரும்பாலான உள்ளரங்கு நிகழ்வுகளுக்கு கொவிட் சான்றிதழ் பயன்பாட்டை நீடிப்பது குறித்து பரிசீலிப்பதாக அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் கூறியது.
இவ்வாறான நாட்டின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நூறு முதல் ஆயிரங்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜூலை இறுதியில் 5,000 பேர் மத்திய சுவிஸ் நகரமான லூசெர்னில் கூடியமை குறிப்பிடத்தக்கது.