கொரோனா வைரஸ் தொற்று சுவிட்சர்லாந்தில் உணவுப் பழக்கத்தை பாதித்துள்ளது, இதனால் மக்கள் சராசரியாக மூன்று கிலோ எடை கூடியுள்ளனர் என்று St Gallen பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வு, ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் பொது தொலைக்காட்சியான SRF இல் வெளியிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் அனைத்து வயதினரிலும் சராசரி எடை அதிகரிப்பு 3.3 கிலோவாக இருந்தது. இதுவரை மிகவும் பாதிக்கப்பட்ட வயதுக் குழுவாக 45-64 வயதுடையவர்கள் உள்ளனர். இவர்கள் சராசரியாக 6.7 கிலோ எடை அதிகரிப்பை காண்பிக்கின்றனர்.
“இந்த ஆய்வின் முடிவுகளை முந்தையவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்த எடை அதிகரிப்பு மிக அதிகம் என்று செயின்ட் காலென் பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் ருடால்ப் கூறினார். 2014-2019 ஆண்டுகளில் சராசரியாக மக்கள் சுமார் 100 கிராம் எடை அதிகரிப்பை கொண்டிருந்தனர்.
இந்த ஆய்வு பல்கலைக்கழகத்தால் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படுகிறது. தற்போதைய ஆறாவது மதிப்பீட்டைப் போல எடை மாற்றம் முன்னொருபோதும் குறிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றத்திற்கான ஒரு காரணம் கொரோனா தொற்று என்று கூறப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை செய்வது பொதுவாக அதிக சிற்றுண்டி மற்றும் குறைந்த உடற்பயிற்சியைக் குறிக்கிறது என்று SRF அறிக்கை கூறுகிறது. ஆனால் ஆய்வுக்கு உட்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமான உணவுக்கு போதுமான பணம் இல்லை என்று கூறினர் – இது 2019 இல் 16% ஆக காணப்பட்டது. அதிகரித்த மது அருந்துதலும் ஒரு எடை அதிகரிப்பில் பங்கைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.
இந்த போக்கை அவதானித்த ஊட்டச்சத்து நிபுணர் ஜர்க் ஹாஸ்லி, உணவு பழக்கத்தில் ஒழுங்குமுறை இல்லாததும் ஒரு காரணம் என்று SRF இடம் கூறினார். “ஒழுங்குமுறை இல்லை என்றால், மக்கள் மாலை நேரங்களில் அதிகமாக சாப்பிட முனைகிறார்கள், மாலையில் அதிகமாக சாப்பிடுவது பெரும்பாலும் பசியை தூண்டுகிறது. எனவே மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள் எடை கூடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.