சுவிஸில் கொவிட்-19 தொற்று விகிதங்கள் அதிகரித்து வருவதால், சுவிட்சர்லாந்துக்கான பயண ஆலோசனை கட்டுப்பாட்டு நிலைகளை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து கொவிட் அபாய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சுகாதார நிலை காரணமாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் மக்களுக்கு அங்கு வைரஸ் தொற்றும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பொது சுகாதாரத்துக்கான மத்திய அலுவலகத்தின்படி, சுவிட்சர்லாந்தின் தொற்று விகிதம் சமீபத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2,500 மற்றும் நாள்தோறும் மருத்துவமனை அனுமதி சுமார் 60 என்று குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க பட்டியலில் எஸ்டோனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவையும் உயர் ஆபத்து நிலைக்கு உயர்த்தப்பட்டன, அதே நேரத்தில் ஜெர்மனியும் கனடாவும் இரண்டாவது மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் திங்களன்று அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இருந்து நீக்கியிருந்தன. இதனால் அமெரிக்கர்களும் மேலும் ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் கொவிட்-19 சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத சுவிட்சர்லாந்து, இலையுதிர்காலத்தில் பயண தனிமைப்படுத்தலை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிப்பதாக உள்துறை அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.