கொரோனா தொற்றின் கடுமையான பரவல் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் கொழும்பு மாநகர சபையில் நூற்றுக்கு 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமூகத்தில் 9 மடங்கு தொற்றாளர்கள் காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாள் ஒன்றில் கொரோனா தொற்றாளர்கள் 5000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமையால் 50,000 ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேல் சமூகத்தில் காணப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அதனால் நாட்டை மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முடக்குவதன் மூலமே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.