வடகொரியா தனக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு அவற்றை வழங்குமாறு வடகொரியா கூறியுள்ளதாக ஐ.நா சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வறிய நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்ட COVAX திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinovac தடுப்பூசிகள் வட கொரியாவிற்கு நன்கொடையளிக்கப்பட்டிருந்தன.
ஆகஸ்ட் 19 வரை வட கொரியாவில் கொவிட் நோயாளர்கள் எவரும் பதிவாகியிருக்கவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 37,291 பேருக்கும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் அதன் வாராந்த அறிக்கையில் கூறியுள்ளது.
கொவிட் தொற்று ஆரம்பமாகியவுடனேயே, அதற்கெதிராக மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை வட கொரியா அமுல்படுத்தியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் நாட்டின் எல்லைகளை முதன்முதலாக மூடிய நாடுகளில் வட கொரியாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா இவ்வாறு தடுப்பூசிகளை நிராகரிப்பது முதன்முறை அல்ல. கடந்த ஜுலையில் பக்கவிளைவுகளை காரணங்காட்டி 2 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகளையும், ரஷ்யா பல்வேறு தடவைகள் வழங்க முன்வந்த Sputnik V தடுப்பூசியையும் வட கொரியா இதற்கு முன்னர் நிராகரித்திருந்தது.
கொவிட் தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வட கொரியா சந்தேகங்களை வௌியிட்டு வருகின்றது.