Home உலகம் கினியாவில் அரசாங்கத்தை கலைத்து ஆட்சியை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

கினியாவில் அரசாங்கத்தை கலைத்து ஆட்சியை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

by Jey

கினியாவின் தலைநகரில் கிளர்ச்சியை நடத்திய ஆயுதப் படையினர், பிராந்திய ஆளுநர்களை இராணுவத்தால் மாற்றியமைத்து, அரசியலமைப்பையும் அரசாங்கத்தையும் கலைத்து ஆட்சியை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் மறு அறிவித்தல் வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.

தொடா்ந்து ஜனாதிபதியாக இருந்து வந்த அவா், மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஜனாதிபதியான போது அவருக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது.

கினியாவின் ஜனாதிபதி ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, ஜனாதிபதி ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.

அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஜனாதிபதியின் நிலை என்ன என்பது பற்றி அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.

கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதியின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.

related posts