கனடாவில் எதிர்வரும் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் சிறுபான்மை அரசாங்கமொன்று உருவாகக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் ஆளும் லிபரல் கட்சி என்பன பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டிலும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கமொன்றையே உருவாக்கியிருந்தது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை மாற்றியமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட முடியாது எனக் கூறியே பிரதமர் ட்ரூடே தேர்தலை அறிவித்திருந்தார்.
எனினும் அண்மைய கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 338 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றில் தனியொரு கட்சி குறைந்தபட்சம 170 அல்லது அதனிலும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை ஆட்சியை நிறுவ முடியும்.
தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.