கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாடும் சந்திக்காத அளவு வீழ்ச்சியை இலங்கை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான தூரநோக்கற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில் அதன் பிரதி பலன்களை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்க வேண்டி வரும் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நாளுக்கு நாள் கேலிக்கூத்தான கதைகள் கூறிவரும் நிலையில் ஒரு வேளை உணவு உட்கொள்ள தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் மூன்று வேளையில் ஒரு வேளை உணவை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது வியப்பை தருவதாக சஜித் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பொறுப்பேற்று அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு தகுந்த தீர்ப்பு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.