” அடுத்துவரும் நாட்களில் ஒருவேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது. எனவே, மூவேளையும் உணவு உண்டு வாழ்ந்தவர்களுக்கு அடுத்துவரும் சில நாட்களுக்கு இருவேளை உணவு உண்டு வாழவேண்டிவரலாம்.
நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் இருந்து மக்கள் இவ்வாறு தியாகம் செய்வதன்மூலம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும். அதன்பின்னர் அடுத்தகட்டம் நோக்கி நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் அழைத்துசெல்லக்கூடியதாக இருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் தியாகங்களை செய்தே வருகின்றனர்.
தேசிய உற்பத்திகளைக் காக்கவே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாடைகளையும் வைத்து எதிரணி அரசியல் நடத்துகின்றது.” -என்றார்.
அதேவேளை, அவரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.