Home இந்தியா போர்ட் நிறுவனத்தின் தீர்மானம் காரணமாக தொழில் வாய்ப்பினை இழக்கும் இந்தியர்கள்

போர்ட் நிறுவனத்தின் தீர்மானம் காரணமாக தொழில் வாய்ப்பினை இழக்கும் இந்தியர்கள்

by Jey

இந்தியாவில் செயற்பட்டுவரும் தமது இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது என்றும், இனிமேல் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்றும் Ford நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Ford கார் நிறுவனம் 1995 ம் ஆண்டு தமிழகத்தில் தனது தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு, சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை Ford ஆரம்பித்தது. அங்கு, 1998 ல் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு சனாந்த் என்ற இடத்தில் தனது இரண்டாவது தொழிற்சாலையை Ford நிறுவியது. சனாந்த்தில் உள்ள தொழிற்சாலை அதி நவீன வசதிகளைக் கொண்டது. அங்கு, உலகத் தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளன.

தற்போது, இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது என்றும், இனிமேல் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்றும் முடிவெடுத்த Ford நிறுவனம், அதைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஏற்றபடி, குறைந்த தயாரிப்பு செலவில் கார்களை உருவாக்க முடியாததால் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கவில்லை என்றும், அதனால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, Ford உம் இந்தியாவில் தனது கார் தயாரிப்பை நிறுத்தியிருக்கிறது. தமிழ்நாடு, குஜராத் என இரண்டு யூனிட்களிலும் சேர்த்து ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 80,000 கார்கள் மட்டுமே, அதாவது வெறும் 20 சதவிகிதம் கார்களே சமீபகாலமாக உற்பத்திசெய்யப்பட்டு வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாததுதான் உற்பத்தியை நிறுத்தியதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்தும், எங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டொலர் நட்டமாகி விட்டது. புது வாகனங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர்களும் குறைந்து விட்டார்கள் என்று Ford இந்தியாவின் தலைவர் ஜிம் ஃபேர்லி கூறுகிறார்.

சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு வைத்து கார்களை Ford நிறுவனம் தயாரிப்பதாக ஒரு செய்தி வெளியானது. 2019 ம் ஆண்டு அதற்கான ஒப்பந்தம் தயாரானது. ஆண்டுக்கு 4 லட்சம் கார்களைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் தயாரிக்கப்பட்டது. என்ன காரணத்தாலோ Ford-மஹிந்திரா ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராமல் போனது. ஒப்பந்தம் முறிந்தது.

கார் தயாரிப்பை Ford நிறுத்தினாலும் டீலர்ஷிப், சர்வீஸ் சென்டர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியாவில் ஒரு Ford கார் உரிமையாளராக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. காருக்கான வாரன்ட்டி, சர்வீஸ், உதிரிபாகங்கள் இறக்குமதி போன்றவற்றுக்கு Ford நிச்சயம் பொறுப்பேற்குமாம்.

Ford நிறுவனத்தின் சென்னை யூனிட்டில் சுமார் 4,000 பேரும் குஜராத் யூனிட்டில் சுமார் 4,500 பேரும் பணிபுரிகின்றனர். இவர்களின் நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இன்னுமொரு துயரம் இது மாறியுள்ளது.

related posts