Home இலங்கை நாட்டில் நகைச்சுவைதனமாக லொக்டவுனே அமுலில் உள்ளது

நாட்டில் நகைச்சுவைதனமாக லொக்டவுனே அமுலில் உள்ளது

by Jey

” நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறே நாம் வலியுறுத்தினோம். ஆனால் நகைச்சுவைத்தனமான ‘லொக்டவுன்’ நடைமுறையே அமுலில் உள்ளது. இந்நிலைமை தொடருமானால் 10 நாட்களில் நாம் எதிர்ப்பார்த்த பெறுபேற்றை அடைவதற்கு இன்னும் இரு மாதங்களாவது காத்திருக்க வேண்டிவரும்.” – என்று வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறும், துரிதப்படுத்துமாறும் கோரியிருந்தோம். ஆனால் நாளாந்தம் பரிசோதனைகளின் அளவு குறைக்கப்படுவதையே காணமுடிகின்றது.

ஆசியாவிலேயே அதிக தடவைகள் லொக்டவுன் நடைமுறைக்கு சென்ற நாடு இலங்கையாகும். அதேபோல லொக்டவுன் காலத்தில் நடமாட்டம் அதிகமாக இருந்த நாடும் இலங்கையாகும். தற்போதைய லொக்டவுனில் எவ்வித பயன் இல்லை என கூறவில்லை. மரண எண்ணிக்கை குறைவதற்கு இதுவும் ஓர் காரணம். ஆனால் விஞ்ஞானப்பூர்வமாக நடவடிக்கைகளை கையாளுமாறே வலியுறுத்துகின்றோம்.

நாட்டை 10 நாட்களுக்கு விஞ்ஞானப்பூர்வமாக முடக்குமாறு நாம் ஆலோசனை முன்வைத்தோம். எனினும், அது உரிய வகையில் செயற்படுத்தப்படவில்லை. உரிய முகாமைத்துவம் இல்லாததால்தான் முடக்கலை இவ்வாறு நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது போன்று லொக்டவுன் தொடருமானால் நாம் 10 நாட்களில் எதிர்ப்பார்த்த பெறுபேற்றை அடைவதற்கு, இன்னும் இரு மாதங்களாவது முடக்கல்நிலை தொடரவேண்டும்.

அதாவது லொக்டவுன் முறைமை குறித்து விரக்தியை ஏற்படுத்தி, நாட்டை மூடுமாறு வலியுறுத்திய மக்களை, அவர்களின் வாயாலேயே திறக்குமாறு வலியுறுத்துவதற்குதான் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் முயற்சிக்கின்றனர்.” -என்றார்.

related posts