கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு இரசாயன பசளை விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் 96 வீதமானவை தவறானவை என ஆய்வுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் இன்று விவசாய அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடாக, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பசளைகளை பயன்படுத்த அவசியமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், அதுகுறித்த அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
வௌிநாடுகளில் ஒரு ஹெக்டேர் வயலில் 10 தொடக்கம் 12 மெட்ரிக் தொன் அறுவடை பெறப்படுகின்ற போதிலும், இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 4.6 மெட்ரிக் தொன் அறுவடை மாத்திரமே பெறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் செயற்படாமை கவலையளிப்பதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறையில் செயற்படுத்தப்படும் நான்கு வகையான மாஃபியாக்களினூடாக விவசாயிகளும் நுகர்வோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.