அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள தங்களது தூதுவர்களை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உடனடியாக தூதுவர்களை திரும்பப் பெற்றதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான எங்கள் இரண்டு தூதர்களை உடனடியாக பரிஸுக்கு அழைத்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்’ என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் மற்றும் அணு ஆயுத்தை ஏவும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க அவுஸ்ரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாக 2016ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், அவுஸ்திரேலிய நாடுகளிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்ததன் மூலம் திடீரென பிரித்தானியாவுடன் கைகோர்த்த அவுஸ்ரேலியா தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால், பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸுடன் அவுஸ்ரேலியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் 50 பில்லியன் அவுஸ்ரேலியா டொலர் மதிப்பிலானது.