Home உலகம் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் – வடகொரியா

தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் – வடகொரியா

by Jey

தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.

கொரியப் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தென் கொரியாவின் அழைப்புக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த யோசனை ஆரம்பத்தில் வட கொரிய அமைச்சரால் முன்கூட்டியே நிராகரிக்கப்பட்டது.

ஆனால், அரச ஊடகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட எதிர்பாராத அறிக்கையில், இந்த யோசனை போற்றத்தக்கது என்று கிம் கூறினார்.

தென்கொரியா விரோதக் கொள்கைகள் என்று அழைப்பதை நிறுத்திவிட்டால் மட்டுமே இந்த முன்மொழிவைப் பற்றி விவாதிக்க வடக்கு தயாராக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

‘கையாளும் அணுகுமுறைகள், நியாயமற்ற பாரபட்சம், வடக்கை துண்டாடுதல், கெட்ட பழக்கங்கள் மற்றும் சுய பாதுகாப்புக்கான நமது நியாயமான செயல்பாட்டைக் குறைக்கும் அதே வேளையில் தங்கள் சொந்த செயல்களை நியாயப்படுத்தும் விரோத நிலைப்பாடு’ ஆகியன கைவிடப்பட வேண்டும்.

இத்தகைய முன்நிபந்தனை பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே, நேருக்கு நேர் அமர்ந்து போரின் குறிப்பிடத்தக்க முடிவை அறிவிக்க முடியும். உடைந்த உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் சரிசெய்வது என்பது பற்றி விவாதிக்க முடியும்’ என அவர் தெரிவித்தார்.

இதனிடையே கிம் யோ ஜோங்கின் அறிக்கையை கவனமாக பரிசீலனை செய்வதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவுடனான உறவை மீட்டெடுக்கும் முயற்சிகளை தென்கொரியா தொடரும் என்று அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள கொரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாம் சுங்-வூக், வடகொரியா சியோல் மீது மறைமுக அழுத்தத்தை அளித்து, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தடைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த மோதல், 1953இல் போர் நிறுத்தத்துடன் முடிவடைந்தது. ஆனால் அது அமைதி ஒப்பந்தம் அல்ல.

இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக அப்போதிருந்து போரிட்டு வருகின்றன. சில சமயங்களில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் வடகொரியாவுக்கு சீனாவும் ஆதரவு கரம் நீட்டுகின்றன.

000

related posts