வளி மாசடைவதால் ஏற்படும் அபாய நிலை முன்னரை விட தற்போது அதிகரித்துக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் வளி மாசடைவினால் ஏற்படும் விளைவுகளால் உயிரிழப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது புகைப்பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் மரணிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஒப்பானது என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வளி மாசடைதல் காரணமாக அதிகளவில் வறிய மற்றும் நடுத்தர வருமான மீட்டும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகள் பொருளாதார அபிவிருத்தி நோக்கில் நிலக்கரி போன்ற உயிர்ச்சுட்டுப் எரிப்பொருட்களை அதிகம் எரிப்பதே இதற்கான பிரதான காரணமாகும்.
அதனால் காலநிலை மாற்றத்திற்கும், வளிமண்டலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு 194 உறுப்பு நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
வளி மாசடைவதால் நிகழும் 80% மரணங்களுக்கு, வளிமண்டலத்தில் காணப்படும் 2.5 மைக்ரோனுக்கும் குறைவான நுண்கழிவு துகள்களே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த கழிவு துகள்களில் நைதரசன் டயொக்சைட்டு, சல்பர் டயொக்சைட்டு மற்றும் காபன் மொனோக்சைட்டு என்பன உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.