ஆப்கனில், கடுமையான குற்றங்களுக்கு கையை வெட்டுவது, துாக்கிலிட்டு கொல்வது ஆகிய தண்டனைகள் தொடரும்’ என, தலிபான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1995 – 2001 வரை ஆப்கனை தலிபான் ஆட்சி செய்த போது, கடுமையான குற்றங்களுக்கு பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்துக் கொல்வது, கையை வெட்டுவது, துாக்கிலிடுவது உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன.
தற்போது ‘ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, முந்தைய ஆட்சியில் இருந்தது போன்ற தண்டனைகள் இருக்காது’ என, உலக நாடுகள் எதிர்பார்த்தன.
இந்நிலையில், தலிபான் நீதித் துறை அமைச்சர் நுாருதீன் துராபி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆட்சியில், விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் முன்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இதை பல நாடுகள் விமர்சித்தன.
ஆனால் நாங்கள், அந்த நாடுகளின் சட்டங்கள் அல்லது தண்டனைகள் குறித்து விமர்சிக்கவில்லை. அதனால்,யாரும் எங்களுக்கு எப்படி சட்டம் இயற்றுவது எனக் கூறத்தேவையில்லை. நாங்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். குரானில் குறிப்பிட்டுள்ளபடி சட்டங்களை அமல்படுத்தி தண்டனை வழங்குகிறோம்.
நாட்டின் பாதுகாப்பு கருதி, குற்றம் செய்வோரின் கைகளை வெட்டுவது அவசியம். இதுபோன்ற தண்டனைகள் குற்றங்கள் குறைய உதவும். பொது இடத்தில் தண்டனையை நிறைவேற்றலாமா என்பது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உலக நாடுகளுடன் இணைந்து செயல்படவும், ஐ.நா.,வின் அங்கீகாரத்தை பெறவும் தலிபான் அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில், பழையபடி குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்திருப்பது, உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.