வடகொரியா இன்று காலை ஏவுகணை ஒன்றை பரீட்சித்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இப்பரீட்சித்தல் நடவடிக்கையானது தமது உரிமையென ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் பொதுச் சபை கூட்டத்தொடரில் வடகொரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
வடகொரியா இன்று காலை பரீட்சித்துள்ள ஏவுகணை ஜப்பான் கடற்பரப்பில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது பலஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாமென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாத ஆரம்பத்திலும் வடகொரியா இரண்டு குறூஸ் ஏவுகணைகளையும் பலஸ்டிக் ஏவுகணை ஒன்றையும் பரீட்சித்துள்ளது.
தான் தென்கொரியாவுடன் அணுவாயுத பேச்சுவார்த்தையொன்றுக்கு தயார் என தெரிவித்து ஒரு சில நாட்களுக்கு பின்னர் இவ் ஏவுகணை பரீட்சிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதேவேளை வடகொரியா தமது பாதுகாப்பிற்காக மேற்கொள்கின்ற செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமையில்லையென ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் வடகொரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜப்பான் அமெரிக்கா மற்றும் தென்கொரிய போன்றன கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.