நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
அரிசி மற்றும் நெல் வகைகளுக்கு விலையை நிர்ணயித்து 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமல்ல தரவுகளை சேகரிப்பதற்கு பிரிகேடியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். விலையை நிர்ணயிப்பதற்கு மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனாலும் உரிய தீர்வு கிட்டவில்லை. மேற்படி அதிகாரங்கள் போதாதென அவசரகால சட்டமும் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது? அரிசி வகைகளின் விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். அரசு வேடிக்கை பார்க்கின்றது. அதாவது நகைச்சுவை தனமான அரசாக இது மாறியுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை ஏற்கனவே நகைச்சுவையாக்கிய அரசு, தற்போது அவசரகால சட்டத்தையும் நகைச்சுவையாக்கியுள்ளது. நெருக்கடியான கட்டங்களிலேயே அவசரகால சட்டம் பயன்படுத்தப்படும். ஆனால் ஒடுக்குமுறைக்காகவே இந்த சட்டத்தை தற்போதைய அரசு கொண்டுவந்தது. அது உடன் நீக்கப்பட வேண்டும்.” – என்றார்.