Home உலகம் தென்கொரியாவுடன் நேரடி தகவல் தொடர்பை மீண்டும் தொடங்கிய வடகொரியா

தென்கொரியாவுடன் நேரடி தகவல் தொடர்பை மீண்டும் தொடங்கிய வடகொரியா

by Jey

வடகொரியா-தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பல்வேறு ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியா கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஆறு மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இதற்கிடையில், வடகொரியா – தென்கொரியா இடையே நேரடி தகவல் தொடர்பு இணைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வடகொரிய அதிகாரிகள் தொலைபேசி மூலம் தென்கொரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு இருநாட்டிற்கும் இடையே உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், தங்கள் நாட்டிற்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய பிரசுரங்களை தென்கொரியா தங்கள் நாட்டு எல்லைக்குள் வீசியதாக குற்றஞ்சாட்டிய வடகொரியா தென்கொரியா உடனான தகவல் தொடர்பை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துண்டித்தது. மேலும், தென்கொரியாவில் இருந்து வரும் அழைப்புகளுக்கு வடகொரியா பதிலளிக்காமல் இருந்துவந்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இணைப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு வடகொரிய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தென்கொரியா இடையேயான தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்தே இருநாடுகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு மற்றும் தொலைபேசி இணைப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன

related posts