அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து ஹைதி நாடு பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் டி எஸ் திருமூர்த்தி உரையாற்றினார்.
வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் உள்ள ஹைதி நாடு தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அங்கு கடத்தல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்தியா தனது ஆதரவை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
அங்கு கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் கடுமையான கலவரம் நடைபெற்று வருகிறது. 944 கொலைகள், 124 கடத்தல்கள், 78 பாலியல் வன்முறைகள் போன்ற கொடூரங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. இத்தகைய நெருக்கடி நிலையில் இந்தியா ஹைதி நாட்டுக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக -அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் உலக நாடுகள் அனைத்தும் உதவ வேண்டும் மற்றும் அதிபர் ஜோவெனெல் மோய்ஸ் கொலை சம்பந்தமாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு ஆகஸ்ட் 14ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. ஆயிரக்கணக்கானோர் அதில் பலியாகினர்.77 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. கடுமையான பிரச்சினைகள் மத்தியில் சிக்கி தவிக்கும் ஹைதி தீவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.