இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் விட்டன.
ஆறாவது விரலாய் மாறிப்போன ஸ்மார்ட்போன்கள் உதவியுடன் தங்களின் சுக-துக்கங்களை பகிர்வதற்கும், அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் என பல தேவைகளுக்கு இந்த சமூக ஊடகங்கள் மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதுவும் பேஸ்புக் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற சமூக ஊடகங்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன.
பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் ( இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி) டாலரை இழந்துள்ளார். இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5 இடத்திற்கு தள்ளப்பட்டார். திங்கள் கிழமை மட்டும் பங்கு சந்தையில் 4.9 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. செப்டம்பர் பாதிக்குப் பிறகு அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலரில் இருந்து 121.6 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.