உத்தர பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் கூறியதாவது:- லகிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னவிதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்?
உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா? ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?
ஆளும் கட்சியின் கூண்டுக்கிளி போன்று மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. அரசாங்கம் என்ன விதிமுறைகள் கூறினாலும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்- மந்திரிக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள். நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, லகிம்பூர் கேரி செல்வதற்கு அரசியல் தலைவர்களுக்கு உத்தர பிரதேச அனுமதி மறுத்து வந்தது. வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து ராகுல் காந்தி செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி லகிம்பூர் கேரி செல்ல இருப்பதாக டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். இதையடுத்து சிறிது நேரத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் மட்டும் லகிம்பூர் செல்வதற்கு உத்தர பிரதேச உள்துறை அனுமதி அளித்துள்ளது.