காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நேற்று ஜம்முவின் இட்ஹா சங்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 2 ஆசிரியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால், காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு காஷ்மீர் கவர்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது காஷ்மீர் சகோதர, சகோதரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது மிகுந்த வலி நிறைந்ததாகவும், கண்டனத்திற்குரியதாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு துணையாக உள்ளோம். காஷ்மீரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.