மாகாணசபைகளுக்கான தேர்தல் 2022 முதல் காலாண்டில் நடத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அரசின் சார்பில் மேற்படி உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” தமது அரசு அடுத்தவருடம் முதல் காலாண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என பஸில் ராஜபக்ச இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். பழைய விகிதாசார முறைமையின்கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பொறுப்பு மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் பஸில் வழங்கினார். அவ்வாறு சட்டத்திருத்தம்வரும்போது அதற்கு நாமும் ஆதரவு வழங்குவோம்” – என்றார்.
அதேவேளை, மேற்படி தேர்தல் மலையக மலையக அரசியல் கட்சிகளும் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன. சில வேட்பாளர்கள் தற்போதே தயாராக ஆரம்பித்துள்ளனர்.