காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர்.
இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் நடிகர் சித்தார்த் வலைத்தளத்தில், ‘‘பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவது இல்லை” என்ற பதிவை பகிர்ந்தார்.
இது சர்ச்சையானது. நாகசைதன்யாவை மணப்பதற்கு முன்னால் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்ததாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது. எனவே தற்போது கணவரை பிரிந்த சமந்தாவை விமர்சிக்கும் வகையிலேயே சித்தார்த் இந்த பதிவை வெளியிட்டதாக வலைத்தளத்தில் பலரும் அவரை கண்டித்தனர்.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து சித்தார்த் கூறும்போது. ‘‘யாரையும் மனதில் வைத்து அந்த பதிவை நான் வெளியிடவில்லை. யாருடையை பெயரையும் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம்.
சமூக வலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பு அல்ல. நான் அன்றைய தினம் வாழ்க்கை குறித்து இயக்குனர் அஜய்பூபதியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனது வாழ்க்கையில் நடந்த விஷயம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால் என்னைத்தான் அப்படி சொன்னார் என்று யாரும் வேறுவிதமாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது” என்றார்.