பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டாக்டர் எஸ்.மனிஷ், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், ஷரண்யா அரி, மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
200 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சென்னை மாநகராட்சியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் சார்பில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 9 லட்சத்து 49 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனாதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் மாநகராட்சி என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாந்தியன் சாலை-காசாமேஜர் சாலை மேம்பாலம், செனடாப் சாலை-டர்ன்புல்ஸ் சாலை மேம்பாலம் மற்றும் காந்தி மண்டபம் மேம்பாலம் ஆகியவற்றை அழகுப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.