முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை கைவிடும் சட்டமா அதிபரின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியவர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மனு பரிசீலனைக்காக பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு அழைப்பாணை அனுப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிக்கு நீதிபதி குழாம் உத்தரவிட்டனர்.
காணாமல் போன இளைஞன் ஒருவரின் தாயான சரோஜா கோவிந்தசாமி நாகநாதன் உள்ளிட்ட உறவினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்களை கடந்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை கைவிட சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள தீர்மானம் நியாயமற்றது என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .