எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் நெருக்கடிக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரிய தீர்வொன்றை நிதியமைச்சர் முன்வைக்காவிட்டால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் நிதி நெருக்கடியை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொள்ள வேண்டி வரும் என நிதியமைச்சருக்கு தெரிவித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தடையற்ற எரிபொருள் விநியோகம் ஜனவரிக்கு பின்னர் சாத்தியமில்லாமல் போகலாம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குவது அல்லது விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வது இதற்கான தீர்வாக அமைய முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்ஐஓசி விலைகளை அதிகரித்தால் அது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். நுகர்வோர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருளை கொள்வனவு செய்வார்கள். இதன் காரணமாக அதன் நஸ்டம் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 83 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த வருட இறுதியில் 120 பில்லியனாக அது அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.