மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டன் நகரில் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். மேலும், இந்திய, அமெரிக்க பொருளாதார, நிதி கூட்டாண்மை உரையாடலின் 8-வது மந்திரிகள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனும், அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் யெல்லனும் கூட்டாக தலைமை ஏற்றனர்.
வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமையன்று நிர்மலா சீதாராமன் நியூயார்க் நகரத்துக்கு சென்றார்.
அங்கு நேற்று முன்தினம் வட்டமேஜை சந்திப்பாக உலகளாவிய தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ‘பிக்கி’ என்று அழைக்கப்படுகிற இந்திய வர்த்தக, தொழில்சம்மேளனமும், அமெரிக்க இந்திய பாதுகாப்பு கூட்டாண்மை மன்றமும் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது தெளிவான அர்ப்பணிப்புள்ள தலைமை உள்ளது. இந்தியாவில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் இருப்பதை பார்க்கிறேன்.
இந்தியாவில் புதிதாக தொடங்கப்படுகிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளன. தற்போது அவற்றில் பலவும் மூலதனச்சந்தை மூலமாக பணம் திரட்டுகின்றன.
இந்த ஆண்டு மட்டுமே அவற்றில் 16 நிறுவனங்கள் ‘யூனிகார்ன்’களாக தகுதி பெற்றுள்ளன. (யூனிகார்ன் என்பது 1 பில்லியன் டாலர் அதாவது, சுமார் ரூ.7,500 கோடி மதிப்பை எட்டுகிற நிறுவனங்கள் ஆகும்).
இந்தியா மிகவும் சவாலான காலங்களில் கூட டிஜிட்டல் மயமாக்கலின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறது.
நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு, பணம் சேர்ப்பதற்கான எல்லையை முன்னே தள்ளுவதற்கு உதவுகிறது. நிதி தொழில்நுட்பம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.