திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த 16 ஆம் தேதி அன்று 25,124 பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 11,481 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். உண்டியலில் 2.14 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 30-31 ஆகிய தேதிகளில் கோ மகா சம்மேளன் என்ற பெயரில் விவசாயிகளுக்கான இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து சுமார் 1,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். மேலும் அந்த பயணத்திற்கான டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டார். மேலும் ஆண்டுதோறும் டெல்லியில் இருந்து திருப்பதிக்கு 3.5 கோடி பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்களுக்கு ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்