Home இந்தியா இந்தியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

இந்தியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

by Jey

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம். ஜப்பானை விட 5 மடங்கு, ஜெர்மனியை விட 9 மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதனோம், 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதற்காக இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.

related posts