Home இந்தியா தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்

by Jey

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறுகிறார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருது வழங்கும் விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர், இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றார்.

முன்னதாக விருது வழங்குவதற்கு முன் ரஜினிகாந்த குறித்த ப்ரோமோ வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் நடிகர்கள் அமிதாப்பச்சன், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை குஷ்பூ, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் ரஜினிகாந்தை பாராட்டி பேசினர்.

தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி.. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூர், அண்ணன் சத்யநாராயணாவுக்கு நன்றி… என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றி….. இந்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள்தான்” என்று அவர் தெரிவித்தார்.

related posts