ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருமாறு உலக நாடுகளுக்கு சீனா-பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
நேற்று சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். அதில் ஆப்கன் கள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சீனா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியதற்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும், கொரோனா பாதிப்பை திறம்பட கையாண்ட விதத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
சீன அரசு வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதற்கும், பாகிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவதற்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.