உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.57 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 96,899 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்றில் இருந்து 91,620 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 643 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும், கள நிலவரப்படி கொரோனா எண்ணிக்கை கூடுதலாக பதிவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது அரசுக்கு கவலை அளித்துள்ளது.
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் வடமேற்கில் கன்சு மாகாணத்தில், லான்ஜவ் சிட்டியில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.