ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு, அங்கு தலீபான்கள் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றினர். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசை அமைத்தனர். தலீபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பலான நாடுகள் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக அழைத்து வந்தன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் மீதம் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங்களில் முழுமையாக மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசின் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான மாநில துணை செயலாளர் பிரையன் மெக்கன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் 439 அமெரிக்கர்கள் உள்ளதாகவும், அவர்களில் 363 பேருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களில் 176 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.